திருடனை போலல்லவா பார்க்கிறாய்

3 Feb

surya
என் வாழ்கையில் ஒரு வரி தந்தி போல் தான் வந்து சேர்ந்தாய்…
புயலாய் மாற்றங்கள் இல்லையெனினும், புயலுக்கு பின் வருகிற அமைதியாய் இருந்தாய்….

எதிர்பார்ப்பே இல்லாமல் கடைசி பக்கத்தினை முடிக்கும்போது,
ஆவலுடன் வந்து முதல் பக்கத்தை புரட்டுகிறாய்…

அவசர உதவிக்கு 100, 103, 108 என எல்லா எண்களையும்,
என் செல்லிடபேசி எண்ணாகவே தெரிந்து வைத்திருக்கிறாய்…
ஆனால், உன் மனதை கேட்டால் மட்டும் திருடனை போலல்லவா பார்க்கிறாய்….

தேவையென்றால் தான் காதலென்றால்,
மீதிக்கணம் ஏன் மௌன மொழி பேசுகிறாய்?

தூரத்தில் வரும் உன்னிடம் வந்து நட்பாய் நலம் விசாரிப்பதை விட,
கண்டதும் கண்கள் விரிய வந்து கட்டியணைப்பது தான் என் காதல்!

Advertisements

முத்தங்கள் முடிவிலி

1 Feb

love,lovers,couple,cute,kiss-9ff128f1781d546729b8bd178df82946_h_large
போகிற பாதையில்
சுயத்தை தொலைத்து, காதலில் விழுந்து,
அரிதானது இடைவெளி,
ஆடும் கண்மணிகள், சூடும் பூமாலைகள்,
இசைந்தாடும் இதழ்கள்,
பின்னோக்கி பாயாத நட்பின் பரிவர்த்தனைகள்,
காதலாய் கணியும்,
படைப்பின் பிரிவுகள் உணர்த்தும் வசனங்கள்,
கவிதை சமையல்,
காதல் பசியாறியிருக்கும், பின்னொன்று வந்திருக்கும்.
செயற்கையாய் பழகிவிட்டோம்,
இயற்கை அப்பாலில்லை, உன்னில் உணர்கிறேன்.
காதல் வினைச்சொல்,
நீ அந்த காதலுக்கு உரிச்சொல்.
முத்தங்கள் முடிவிலி,
ஒத்தைப்படை கூடாதென நீயும், நானோ
இரட்டைப்படையும் கூடாதென!
அருவமாக காதல், உருவமாக நீ!
எட்டாத வானத்திலுள்ள,
மேகம் விலகி செல்வது இயற்கை.
இயல்பானது வாழ்கை!
பொய்கள் பொய்த்து போனது அல்லவா?
தனிமை வளர்ந்தது.
திருடப்பட்டது காதல் நம் இருவரிடமுமிருந்து!
இருவருக்கும் தெரிந்தே
காதலின் மீட்சி மீட்டெடுக்க முடியாததானது.

தக்கனபிழைத்து வாழும் காதல்

14 Feb

எழுதிய கவிதைகளோ நூறை தாண்டாது….
ஆனால், உன் பெயரை எழுதினேன் ஒவ்வொரு முறையும் எண்ணாது…..

என் இதயம் என் உடலெங்கும் குருதியை அனுப்பும் முன்,
நுரையீரல் தரும் உயிர்வளியை கலக்கிறதோ இல்லையோ,
உன் நினைவுகள் தரும் காதலை கலந்து விடுகிறது……

நீ கண்ணீரோடு அன்று விடைபெற்றதாலோ என்னவோ,
நான் இன்று கண்ணீர் கொள்கிறேன் உன்னை நினைத்து……

நம்மை பிரிக்க முடியாதபடி இணைக்கத்தான்
இப்போது இந்த தனிமை என்றால் தாங்கிக் கொள்கிறேன் இதை….

தூரம் பிரித்திருக்கலாம், ‘ஒளி அளவளாவல்’ இணைத்திருக்கலாம் நம்மை…..
விக்கல்கள் வராமலிருந்திருக்கலாம், குறுஞ்செய்திகள் வந்துகொண்டுத்தான் இருக்கிறது…
கனவுகள் வராமலிருக்கலாம், கனத்த மின்னஞ்சல்கள் வந்து கொண்டுத்தான் இருக்கின்றன…

காதலும் தன்னை புதுப்பித்து கொண்டுத்தான் இருக்கின்றது…..
பரிணாம வளர்ச்சியின் ‘தக்கனபிழைத்தல்’ காதலுக்கும் பொருந்தும்….

நட்பு போர்வை போர்த்திய காதலன் நான்

21 Jan


யதார்த்தத்தின் நிழலில் இளைப்பாறி கொண்டிருந்த என்னை,
உன் கனவுகளை நோக்கி ஓட சொல்கிறாய்…….

சிறகுகளும் தருகிறாய் நான் கேட்காமலே….
பிடுங்கியும் கொள்கிறாய் என்னை கேட்காமலே….

சாலையை கடக்கும் போது கேளாமல்,
என் கரம் பிடித்து வந்தாய்….

வாழ்க்கையை கடக்க, நான் கரம் நீட்டியும்,
என் கரம் பற்ற யோசிக்கிறாய்…

உன்னை பார்த்தவுடன் தோன்றுவது,
கவிதை… உனக்கு பிடித்தது

நீ பிரியும் போது தோன்றுவது,
காதல்… எனக்கு பிடித்தது

நீ என்னிடம் கொண்டது வெறும் நட்பாயினுமே,
நான் ஒரு நட்பு போர்வை போர்த்திய காதலன் தான்….

தினமும் என் மனதில் குறும்படமாய் நீ

3 Jan

உன் பகல் நேர பொழுதுகளையெல்லாம் என் கண்கள்
படம் பிடித்து தான் குறும்படமாய் காண்பிக்கிறது என் மனது.
இரவில் உறங்கும் முன்…..

எங்கேயாவது உன் பெயரை பார்த்தாலோ, கேட்டாலோ,
என் மனத்திரையில் உன் படங்கள், உறையும் காட்சிகளாய்…

விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் போல தான் இப்போதெல்லாம்
என் கனவுகள், இடைவேளை இன்றி தொகுத்து வழங்கப்படுகிறது
என் மனதால்…….

நீ எங்கே என்று நாலாபுறமும் நோட்டம் விட்டு
உன் கண்களை கண்டுபிடித்து தான்,
இன்றைய செய்திகளை வாசிக்கிறது என் கண்கள்….

இருந்தும் அடுத்த கட்டத்துக்குள் நுழையாமலே,
நம் பார்வை பரிவர்த்தனைகள் ஒரு குடும்ப நெடுந்தொடர்
போல தான் தொடர்கிறது என்றுமே அந்நாளின் இறுதியில்…..

காதல் – நட்பின் பரிணாமமே

30 Oct


கண்கள் இமைக்க மறுத்தது…
நினைவுகள் மறக்க முடியாதவையானது…
தவிப்புகள் தவிர்க்க இயலாததானது….

கரங்கள் பிரிக்க முடியாதவையானது….
காதல் அத்தியாவசியமானது….
நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ….

நீண்ட நாட்களாக நெருங்கிய நம் நட்பில்
காதல் என்ற துரு ஏறுமோ? இல்லை
நட்பு தான் சற்று இடைவேளை கேட்குமோ?

எல்லாமே தன்னிலை மாறும்,
ஆனால், நீ என்றுமே நட்பாகவே
எனக்கு போதும் என்பவள் நீ…

நாம் நண்பர்களாகவே தொடர்ந்த போதும்,
காதல் தானே நம்மை தொடர்ந்தது…..

காதல் நம் வசப்படாத நிலையிலும் நாம் காதலின்
வாசலில் தானே காத்து இருந்தோம்!!!!!!!!

மனிதன் பரிணமித்து தான் வந்தான் என்றால்,
நம் காதலும், நட்பின் பரிணாமமே!!!!!
என்று ஓரிரு காரணங்களுடன் நான்

இத்தனை நாட்களாய், அருவமாயிருந்த என் காதலியை,
உருவமுற்ற என் தோழியான உன்னிடத்தில் பார்க்கிறேன்
அதில் தவறேதும் இல்லையே!!!!!!!!

தவேறதும் இருந்தால் சொல்,
மாற்றி கொள்கிறேன் என் காதலை, காதலியை அல்ல……

நீ மறைத்து வைத்த பொய் மீன்கள்

15 Oct

தினமும் விழிகளில்
மை பூச மறந்தாலும்
பொய் பூச மறப்பதில்லை நீ –
அதுவும் உனக்கு அழகென்ற ஆணவத்தில்…

என்னை ரசித்திடும் நேரத்தில்
அப்பொய் திரை சரிந்தாலும்
சட்டென்று சரி செய்து கொள்வாய் –
சில நொடிகளே எனினும்
கவனிக்க தவறுவதில்லை நான்…

என்னை வெறுப்பதாய் சொன்னதும்,
மூண்ட என் சோக மௌனம் கண்டு
உன் கண்கள் கலங்குவதுண்டு –
எத்தனை முறை தான் சாதிப்பாயோ
அதை கண்களில் தூசி என்று..

கூச்சமின்றி உன் நண்பர்களின்
கைகோர்த்து செல்லும் நீ
என்னுடன் கை குலுக்கவே
நடுக்கம் கொள்கிறாய் –
தொடுதலால் உன் உணர்வுகள் அறிந்திடுவேன் என்றோ….

உன்னையும் மறந்து
என்னோடு சிரித்ததற்கு
கடிந்து கொள்ளாதே உன்னை….
நீ நடித்தாலும் இயல்பாய் நடந்தாலும்
உண்மையை நான் அறிவேன் …

வலையில் மாட்டிய மீன்களாய்
உன்னுள் தவிக்கும் உன் பொய்களுக்கு
விடுதலை வழங்கடி பெண்ணே
நான் சிக்கி கொள்வேன் உன்னிடம்
அதற்கு பதிலாக…!!!!

 

%d bloggers like this: